நெல்லை
நேற்று நெல்லை மற்றும் தூத்துக்குடியில் கனமழை பெய்துள்ளதால் கோடையில் வாடிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.
நேற்றுகாலை முதல் நெல்லை மாவட்டம் அம்பை, மணிமுத்தாறு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென பரவலாக மழை பெய்தது. மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தச்சநல்லூர், கொக்கிரகுளம், வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை மற்றும் கே.டி.சி. நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் முண்டந்துறை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்குள் உள்ள அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த கனமழையால் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம் முழுவதும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளித்ததனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவதியடைந்தனர்.
தென்பாகம் காவல் நிலைய வளாகத்தை சுற்றி மழைநீர் தேங்கியதோடு, காவல் நிலையத்திற்கு உள்ளேயும் மழைநீர் புகுந்ததால் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.