கொல்கத்தா

நேருவின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் ஒரு அடையாளம் எனக் காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தோல்வியை முன்னிட்டு ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் மூத்த உறுப்பினர்கள் அவர் ராஜினாமா செய்யக் கூடாது எனத் தெரிவித்தும் அவர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. இந்த மாதம் 10 ஆம் தேதி டில்லியில் நடந்த காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கட்சியின்  இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி செய்தியாளர்களிடம், “காங்கிரஸ் போன்ற ஒரு வலுவான கொள்கைகளைக் கொண்ட கட்சியால் மட்டுமே மதவெறி கொண்ட பாஜகவை எதிர்க்கமுடியும். மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யும் கொள்கையற்ற செயல்களை பாஜக செய்து அதன் முக்கியத்துவத்தை இழந்து விடும் நிலை உள்ளது. இது நாட்டை இரு துருவ அரசியல் தலைமையை நோக்கிச் சென்று விடும். அவ்வாறு செய்வது காங்கிரஸுக்கு நன்மையைத் தரும்.

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக சோனியா காந்தி மிகவும் தயக்கம் காட்டினார். அதே நேரத்தில் ராகுல் காந்தியின் ராஜினாமாவால் கட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டதை மூத்த தலைவர்கள் எடுத்துக் கூறியதால் மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக்  கொண்டார். நேருவின் குடும்பம் காங்கிரஸில் ஒரு அடையாளம் ஆகும். அவ்வாறு கூறுவதில் எந்த தவறும் இல்லை. கட்சியின் தலைமையை ஏற்க வேறு யாருக்கும் சக்தி இல்லை” எனத் தெரிவித்தார்.