சென்னை: போக்குவரத்துத்துறை தொழிற்சங்களுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு பிறகுதான் பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் நோட்டீஸ் ‘காலக்கெடு’ 4-ந்தேதியுடன் முடிவடையும் நிலையில், பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, தொழிலாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்கை அறிவிக்குமா என்ற அதிர்ச்சியும் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான 15-வது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக கடந்த டிசம்பர் 19-ந் தேதி தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் நோட்டீஸ் வழங்கியது.
இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் சமரசம் ஏற்படுத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்தது. அதன்படி கடந்த மாதம் டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. அதில் உடன்பாடு எட்டப்பபடவில்லை.
இதையடத்து ஜனவரி 3-ந் தேதி (இன்று) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று மதியம் 3 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. பேச்சுவார்த்தையில் பங்கேற்குமாறு 23 தொழிற்சங்கங்களுக்கும், போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் ஸ்டிரைக் நோட்டீஸ் ‘காலக்கெடு’ 4-ந்தேதியுடன் முடிவடையும் சூழலில் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் சங்கங்களுடன் பொங்கலுக்கு பின் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்து உள்ளார்.
ஊழியர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தைக்கு பின் சுமூகமாக தீர்க்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர், போக்குவரத்துத்துறை தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் உரிய காலத்தில் 14-வது ஊதிய கோரிக்கையை முடிக்காததால் தொழிலாளிகள் நிர்கதியாய் நிற்கும் நிலை ஏற்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தபின்னரே தொழிற்சங்களுடன் பேசி தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டது என்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உரிய காலத்தில் முடிக்காமல், தொழிலாளர்களை நிர்கதியாக நிற்க வைத்தது. எந்த கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
மிக முக்கியமாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சீர்குலைக்கப்பட்ட ஊதிய விகிதம், மீண்டும் சீரமைக்கப்பட்டு ‘பே மேட்ரிஸ்’ தனித்தனி ஊதிய விகிதம், 2.57 காரணி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. ஊதியமும் 5 சதவீதம் அளவிற்கு உயர்த்தப்பட்டது. இது அத்தனையும் எந்த போராட்டமும் நடத்தாமல், எந்த ஒடுக்கு முறையையும் சந்திக்காமல் கிடைத்தவை. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை எவ்வளவு சீரழிக்கப்பட்டது என்பது எல்லோரும் அறிந்தது.
மகளிர் கட்டண மில்லா பயணத்திற்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.2800 கோடி ஒதுக்கி, டீசல் மானியமாக ரூ.2 ஆயிரம் கோடியும், மாணவர் இலவச பஸ் பயணத்திற்காக ரூ.1,500 கோடியும் ஒதுக்கீடு செய்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அரசாணை 36-ஐ பிறப்பித்து போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்மூலம் போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட காரணமானவர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். புதிய பஸ்களை வாங்க நிதி ஒதுக்கி, புதிய பணியாளர்கள் நியமனத்திற்கு அனுமதி அளித்து துறை சிறப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
தீபாவளி போனஸ் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குறைத்து வழங்கப்பட்டதை யாரும் கோரிக்கை வைக்காமலேயே மீண்டும் 20 சதவீதமாக உயர்த்தி ரூ.16,800 வழங்கி உள்ளோம். இதற்கும் எந்த போராட்டமும் நடத்தப்படவில்லை. மக்கள் மனமறிந்து செயல்படுவது போலவே, தொழிலளர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படுபவர்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு, வாரிசு அடிப்படையிலான பணி போன்றவைகளை நிறைவேற்றி உள்ளோம்.
இப்போது சென்னையில் வரலாறு காணாத அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் பொதுமக்கள் சந்தித்துள்ள இழப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை கூட வழங்க முன்வராத நிலையில், முதலமைச்சர் நிவாரண தொகுப்பை அறிவித்து வருகிறார்.
முழு அரசு எந்திரமும் இந்த பணியில் ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவோம். பேரிடர் காலத்தில் உடனடியாக களம் இறங்கி பஸ்களை வழக்கம்போல் இயக்கி, மக்கள் இயல்பு நிலைக்கு வர முன் நின்றவர்கள் நம் போக்குவரத்து துறை தொழிலாளர்கள். அதேபோல தொழிற்சங்கங்களும் முதலமைச்சருக்கும், பொதுமக்களுக்கும் இந்த பேரிடர் நேரத்தில் உறுதுணையாக நிற்க அன்போடு வேண்டுகிறேன்.
எனவே போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் இதை உணர்ந்து கொண்டு பணியில் உள்ள தொழிலாளர்கள், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்பதையும், பொங்கல் விடுமுறைக்கு பின்பு தொழிற்சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எனவே போராட்டம் அறிவிப்பை கைவிட அன்போடு வேண்டுகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.