சென்னை: மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள் என சென்னை சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கே.எஸ். அழகிரி அவர்கள் தலைமையில், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத் அவர்கள் முன்னிலையில், திருவனந்தபுரம் மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் சசி தரூர் அவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகள், பொருளாதார பேரழிவுகள் மற்றும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு போன்ற பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை விளக்குகிற வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அகில இந்திய காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவரும், மக்களவை உறுப்பினருமான சசி தரூர் கூறியதாவது, மோடி தலைமையிலான பாஜக அரசின் தவறான நிர்வாகம் காரணமாகவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்புவோம், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அப்போது கட்டுக்குள் இருந்த விலை, தேர்தல் முடிவடைந்ததில் இருந்து 10 வாரங்களில் 40 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
கொரோனா 2வது அலையின்போது, ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் அவதிப்பட்டது, விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றில் மோடி அரசு தோல்வி அடைந்து விட்டது என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குரல் எழுப்ப உள்ளோம். வேலைவாய்ப்பின்மை சதவீதம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதற்கும், மத்திய அரசின் நிர்வாக திறமையின்மைதான் காரணம். பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய நுகர்பொருட்கள் மீதான ஜிஎஸ்டிவரியை குறைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம் என்றார்.
பின்னர் செய்தியளார்கள் மேகதாது அணை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிதரூர், மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சினை. இந்த பிரச்சினையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை மாநில தலைவர் தெளிவுபடுத்தி உள்ளார். பொதுவாகவே இரு மாநிலங்கள் இடையிலான பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும். அந்த அடிப்படையில் மேகதாது பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
கொங்குநாடு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, ஒரு மாநிலத்தை பிரிக்க வேண்டும் என்பது அந்த நாட்டின் அரசியல் இயக்கங்கள் மற்றும் மக்கள் முடிவுசெய்ய வேண்டிய விஷயம். கொங்குநாடு விவகாரத்தை பொருத்தவரை அரசியல் இயக்கங்கள், மக்களின் ஆதரவு இல்லை. கொங்குநாடு என்ற கேள்வி தமிழகத்தில் எழவில்லை. எனவே, அதைப் பற்றி விவாதிக்கவேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் வல்லபிரசாத், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விஜய் வசந்த் எம்.பி. மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.