டெல்லி: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்தியஅமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று 6வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையே நடைபெற்றது.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில், “மின்சார அவசரச் சட்ட மசோதாவை நிறுத்திவைப்பது, வேளாண் கழிவுகளை எரிப்பவா்களுக்கு தண்டனை அளிக்கும் பிரிவில் இருந்து விவசாயிகளுக்கு விலக்கு அளிப்பது ஆகிய 2 கோரிக்கைகள் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 4ந்தேதி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இன்றைய பேச்சுவார்த்தை ஆரோக்கியமாகவும், திருப்தியாகவும் இருந்தது. இது நேர்மறையாக முடிந்துள்ளது. இன்று விவாதிக்கப்பட்ட 4 விவகாரங்களில் 2 விவகாரங்களில் உடன்பாட்டு ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், டெல்லியில் நிலவும் குளிர் காரணமாக வயது மூத்தவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களை வீடுகளுக்கு அனுப்புமாறு விவசாயத் தலைவர்களுடன் கோரிக்கை வைத்துள்ளோம். முதல் விவகாரம் சுற்றுச்சூழல் சார்ந்த அவசர சட்டம் தொடர்புடையது. பராலிக்களுடன் சேர்க்கப்படுவது குறித்து விவசாய சங்கங்கள் கவலை தெரிவித்தனர். விவசாயிகளுக்கு விலக்கு அளிக்க இருதரப்பும் ஒப்புக்கொண்டது
மின்சார சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டால் பெரிதளவில் இழப்பு நேரிடும் என விவசாயிகள் கருதுகின்றனர். மின்சாரத்துக்கான மானியத்தை மாநில அரசுகள் வழங்கும் நடைமுறையே நீடிக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.
இருந்தாலும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வேளாண் சங்கங்கள் தெரிவிக்கின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என அரசு தெரிவித்து வருகிறது. அதை எழுத்துப்பூர்வமாக அளிப்பதற்கும் நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட ரீதியான அந்தஸ்து கிடைக்க வேண்டும் என விவசாய சங்கங்கள் கருதுகின்றனர். எனவே, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டரீதியாக அணுகுவது குறித்தும் மற்ற விவகாரங்கள் குறித்தும் ஜனவரி 4-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஆலோசனை தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.