டெல்லி: வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, வேலைநிறுத்தம் அறிவித்துள்ள வங்கிகளின் கூட்டமைப்பினருடன் மத்தியஅரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும் என அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கும் மசோதாவை கண்டித்து டிசம்பர் 16, 17ல் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பினரை அழைத்து மத்தியஅரசு பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையின்போது, மசோதா குறித்து மத்தியஅரசு உறுதி அளிக்கவில்லை. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததது.
இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தினர், இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மசோதாவை இத்தொடரில் தாக்கல் செய்யவில்லை என அரசு தரப்பில் உறுதி அளிக்காததால், திட்டமிட்டபடி டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நாடு முழுவதும் 2 நாட்கள் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்து உள்ளனர்.
யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்ற அமைப்பு வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ”இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது” என்று கூறியுள்ளார்.
இதன் காரணமாக ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகலாம் என்ற அச்சமும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
அதே வேளையில் தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என கூறப்படுகிறது.