டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே 8 பேரை கைது செய்துள்ள சிபிஐ, தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவரை கைது செய்துள்ளது. மகாராஷ்டிராவின் லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா என்பவரிடம் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டு உள்ளார். நீட் முறைகேடு தொடர்பாக இதுவரை கைது செய்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேடு தொடர்பாக குஜராத், பீகார்உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பீகாரில் வினாத்தாள் கசிவு தொடர்பாகவும், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தில் ஆள்மாறாட்டம், முறைகேடு போன்ற மோசடிகள் தொடர்பாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக 63 மாணவர்கள் மீது புகார் பதிவாகியுள்ளதாகவும், அவர்களில் 23 பேருக்கு நீட் தேர்வில் பங்கேற்பதில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் என்டிஏ அறிவித்து உள்ளது. மேலும், 40 பேரின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், நீட் தேர்வர்கள் ஆயிரத்து 563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு நடத்தப்பட்டதாகவும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிபிஐ-யும் தனது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. நீட் முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் சிபிஐ, என்டிஏ, மத்தியஅரசு பதில் அளிக்க அறிவுறுதி உள்ள நிலையில், நீட் முறைகேடு நடந்ததாக கூறப்படும் இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரத்தின் லத்தூரை சேர்ந்த 2 அரசு பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வு எழுதிய மாணவர்களை வெற்றிபெற வைப்பதற்காக ரூ.5 லட்சத்துக்கு மேல் கேட்டதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக மகாராஷ்டிர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, லத்தூரை சேர்ந்த நஞ்சுநேதப்பா என்பவரிடம் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதன் மூலம் நீட் முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இதுவரை கைது செய்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே பீகாரை சேர்ந்த 6 பேர், குஜராத் மாநிலம் கோத்ரா மற்றும் டேராடூனில் இருந்து தலா ஒருவர் என 8 பேரை சிபிஐ கைது செய்திருந்தத நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.