பாட்னா: நீட் முறைகேடு தொடர்பாக வினாத்தாள் லீக்கான விவகாரத்தில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்து வர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
நீட் தேர்வு முறைகே, நீட் வினாத்தாள் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வரும் நிலையில், பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் 3 மருத்துவர்களை சிபிஐ கைது செய்துள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றைய விசாரணையின்போது, நீட் கவுன்சிலிங் தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, நீட் முறைகேடு தொடர்பாக, பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர்கள் 3 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த டாக்டர்கள் 3 பேரும் 2021-ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் அறைகளுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அவர்களின் லேப்-டாப் மற்றும் மொபைல் போன் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, நீட் தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது விசாரணையில் தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத், மராட்டியம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடை பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்தந்த மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், முறைகேடு தொடர்பாக, குஜராத், பீகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் உள்பட 12 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நகரில் இருந்து நீட் தேர்வு வினாத் தாள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
விசாரணையில், ஜார்க்கண்ட் பொகாரோ நகரை சேர்ந்த என்ஜினீயர் பங்கஜ் குமார் என்ற சிவில் எஞ்சினியர் இந்த வினாத்தாள்களை திருடியதும் தெரியவந்தது. திருடிய வினாத்தாள்களை கசியவிட்டதில் ராஜூசிங் என்பவர் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய குற்றவாளிகளான என்ஜினீயர் பங்கஜ்குமார், ராஜூசிங் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, தற்போது பீகார் எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டு ள்ளனர்.
இதன் காரணமாக நீட் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
நீட் தேர்வு முறைகேடு: கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவல்…
நீட் முறைகேடு கைது 9 ஆக உயர்வு: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் கைது!