பாட்னா: நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட 13 பேருக்கு சிபிஐ காவலில் வைக்க பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது. அதன்படி 13 பேரையும் சிபிஐ காவலுக்கு பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டது.
நடப்பாண்டு வெளியான இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் போன்றவற்றால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நீட் மோசடி, தொடர்பாக சிபிஐயும் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை ராஜஸ்தான், குஜராத், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் என மொத்தம் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் பீகாரை பொறுத்தவரை முக்கியமாக வினாத்தாள் கசிவை முன்வைத்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். ஜார்கண்டின் ஹசாரிபாக்கை மையமாக கொண்டு இயங்கி வரும் பள்ளி முதல்வரும், துணை முதல்வரும் கைது செய்யப்பட்டிருந்தனர். அதுபோல குஜராத்தின் கோத்ரா பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியும் சிக்கி உள்ளது. அங்குள்ள முதல்வர் உள்பட சிலரை சிபிஐ கைது செய்து விசாரண நடத்தி வருகிறது.
இதற்கிடையில், நீட் முறைகேட்டின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான ராக்கி என்ற ராகேஷ் ரஞ்சன் நேற்று கைது செய்யப்பட்டார். பீகாரின் நாலந்தாவை சேர்ந்த இவர் தலைநகர் பாட்னா அருகே அதிகாரிகளிடம் சிக்கினார். இவர், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சஞ்சீவ் முகியாவின் உறவினர் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட ராகேஷ் ரஞ்சன் பின்னர் பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சி.பி.ஐ. காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராகேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பாட்னா மற்றும் புறநகரில் 3 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். முன்னதாக பீகார் மற்றும் ஜார்கண்டில் 15-க்கு மேற்பட்ட இடங்களில் இந்த வார தொடக்கத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் பல்வேறு ஆதாரங்கள மற்றும் ஆவணங்கள் அதிகாரிகளிடம் சிக்கியது.
நீட் முறைகேடு விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் இதுவரை சுமார் 57 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் 12 பேரை சிபிஐ கைது செய்த நிலையில், மீதமுள்ளவர்களை பல்வேறு மாநில போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 22 பேர் இதுவரை ஜாமீன் பெற்று இருக்கிறார்கள். நீட் முறைகேடு விவகாரத்தில் பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 13 பேரை கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க பாட்னாவில் உள்ள சிறப்பு கோர்ட்டில் சிபிஐ தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை விசாரித்த கோர்ட்டு அவர்களை சிபிஐ காவலில் எடுக்க அனுமதி மறுத்தது. இதை எதிர்த்து சிபிஐ பாட்னா ஐகோர்ட்டை நாடியது. இந்த வழக்கை நீதிபதி சந்தீப் குமார் விசாரித்தார். விசாரணை முடிவில் பீகார் போலீசார் கைது செய்த 13 பேரையும் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களை இன்றே (நேற்று) சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய சிறை நிர்வாகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து அந்த 13 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நடவடிக்கை எடுத்தது. பீகாரில் நீட் மோசடியில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராகேஷ் ரஞ்சன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த 13 பேருக்கும் அவருடனான தொடர்பு உள்ளிட்டவை குறித்து சிபிஐ விரிவான விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.