டெல்லி: தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக தேசிய தேர்வு முகமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர சைலம் கோழிக்கோடு நுழைவு பயிற்சி மையம் முடிவு செய்துள்ளதாக, அந்த நிறுவன உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் பல மாணவர்கள் தரப்பிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பாண்டு இளநிலை மருத்துவபடிப்புக்கான நீட் நுழைவு தேர்வு மே 5ந்தேதி நடைபெற்ற நிலையில், ஜூன் 4ந்தேதி மாலை தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். முதல் மதிப்பெண்ணை (720 மதிப்பெண்கள்) 67 மாணவர்கள் பெற்றிருப்பது மற்றும் தேர்வு மையங்களில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அகில இந்திய ரேங்க் 1 மதிப்பெண் பெற்றவர்களில் ஆறு பேர் ஹரியானாவில் உள்ள ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் வரிசை எண்கள் ஒரே மாதிரி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து ராஜஸ்தானை சேர்ந்த ஒரே மையத்தில் இருந்து 720க்கு 720 மதிப்பெண்கள் பெறுவது நீட் தேர்வுத் தாள் கசிந்திருப்பதைக் காட்டுகிறது என்று கூறும் ஆர்வலர்கள், கவுன்சிலிங் தொடங்கும் முன், முரண்பாடுகள் குறித்து தேசிய தேர்வு முகமை விரிவான ஆய்வு நடத்த வேண்டும் என்றும், மறு தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. கோரி வருகின்றனர்.
இந்த நிலையில் நீட் தேர்வுகளை நடத்தும், தேசிய தேர்வு முகமை அளித்துள்ள விளக்கத்தில், நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வரும் குற்றச்சாட்டு களில் உண்மையில்லை என்றும், சில மாணவர்கள் ஒரே தேர்வு மையத்திலிருந்து தேர்வு எழுதினர் என்பதால் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு என குற்றச்சாட்டு எழுந்தது என்றும், NEET-UG இல் கேள்வித்தாள் கசிந்ததாகக் கூறப்படும் அறிக்கைகள் “முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் எந்த ஆதாரமும் இல்லாமல் உள்ளன” என்று தெரிவித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து, நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நடந்து முடிந்த நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். நீட் தேர்வை ரத்துசெய்துவிட்டு புதிய தேர்வு நடத்த மாணவர்கள் வலியுறுத்தல். நாடு முழுவதும் 67 பேர் நீட் தேர்வில் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். பல இடங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி மாணவர்கள் பிடிபட்டனர் என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இதற்கிடையில், தேசிய தேர்வு முகமைக்கு எதிராக கேரளாவைச் சேர்ந்த சைலம் குரூப்பும் வழக்கு தொடரப்போவதாக அறிவித்து உள்ளது. கருணை மதிப்பெண்கள் சேர்க்கப்பட்டதாக தேசிய தேர்வு முகமை விளக்குகிறது. நாட்டில் நீட் தேர்வில் இப்படி கிரேஸ் மார்க் கொடுத்ததாக சரித்திரம் இல்லை என்று குற்றம் சாட்டி உள்ளது.
“நீட் தேர்வு தொடங்கிய 2016ஆம் ஆண்டு முதல் முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை ஒரு சிலரே. ஆனால் இம்முறை 67 பேர் முதல் ரேங்க் பெற்றுள்ளனர். தேர்வு தேதிக்கு முன்பே சில டெலிகிராம் சேனல்களில் வினாத்தாள் கிடைத்ததாகவும், தேர்வு நடந்து கொண்டிருந்த போது சாலையோரம் வினாத்தாள் கிடந்ததாக வெளியான செய்தியும் தேர்வுக்கு முன்பே பல இடங்களில் வினாத்தாள் கசிந்திருக்க வாய்ப்புள்ளது. . ,” சைலேம் குழு குற்றம் சாட்டி உள்ளது.