டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான இட ஒதுக்கீடு வகையிலான அகில இந்திய கலந்தாய்வு ஜூலை 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வரும் 16-ஆம் (நாளை) தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு செய்யும் காலம், ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய ஜூலை 12ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் ஜூலை 20ம் தேதி தொடங்கும் என மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஜூலை 20 தொடங்கி, செப்டம்பர் 30ம் தேதி வரை 4 சுற்றுகளாக நடைபெறும்.
எம்.பி.பி.எஸ் ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 27, 28ம் தேதி ஆன்லைனில் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 16, 17ம் தேதிகளில் நடத்தப்பட்டு ஆகஸ்ட் 18ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். 3ம் கட்ட கலந்தாய்வு செப்டம்பர் 6, 7ம் தேதிகளில் நடத்தப்பட்டு செப்டம்பர் 8ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். மேலும், வரும் 16-ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டில், தமிழ்நாடு உட்பட அனைத்து மாநில மருத்துவ கல்லூரிகளுக்கும் 15% இடங்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவும், சேர்க்கை மையங்கள் வாயிலாகவும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர இதுவரை 40,193 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு தேதியை விரைவில் மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.