டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது  தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தனியார் நீட் கோச்சிங்  மையத்தைச்சேர்ந்த நிர்வாகி மற்றும் 5 மாணவர்கள் உள்பட 6 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் 50லட்சம் ரூபாய் வரை கைமாறி உள்ளது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் நாடு முழுதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதாகவும், நீட் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாகவும் குற்றம் சாட்டப்பட்டன. முக கவசத்தில் மைக் வைத்தும், ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.  டெல்லி மற்றும் ராஞ்சி நகரில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்  செய்து தேர்வு எழுதியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக  ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில்  பலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நீட் ஆள்மாறாட்டம் செய்ததில் முக்கிய பங்கு வகித்தது  மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையம் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.  இந்த  பயிற்சி மையத்தில் பயின்ற ஐந்து மாணவர்களின் பெற்றோரிடம் 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது அம்பலமாகியுள்ளது.

தேர்வு எழுதும்  மாணவர்களின் ஆதார் அட்டையின் தகவல்களைக் கொண்டு போலியாக அடையாள அட்டையைத் தயார் செய்து தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி உள்ளதும், . ஓ.எம்.ஆர் தாள்களில் போலியாகத் திருத்தம் செய்தும், ஹால் டிக்கெட்டுகளில் மார்ஃபிங் முறையில் புகைப்படங்களை மாற்றியும் அந்த தேர்வு மையம் தேர்வு எழுத வைத்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தேர்வு எழுதியவர்களுக்கு, தலா ஒரு லட்சம் அந்த மையம் சார்பில் வழங்கியிருப்பதையும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, ஆர்.கே.எஜூகேசன் கேரியர் கைடன்ஸ் பயிற்சி மையத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மையத்தின் உரிமையாளர் பரிமால் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் தேர்வு எழுதிய 5 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள்  ஆள்மாறாட்டம்,  கிரிமினல் சதி, மோசடி, ஆள்மாறாட்டம், ஆவணங்களைத் திருத்தி மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ  வழக்குப்பதிவு செய்யதுள்ளது.