டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் வெளியானது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தேர்வு வினாத்தாள் கசிந்திருப்பது தெரிய வந்துள்ளது. மாணவர் ஒருவர் தனக்கு நீட் தேர்வு வினாத்தாள்  மற்றும் விடைகள் தேர்வுக்கு  முன்னதாகவே கிடைத்தது என்பதை ஒப்புக்கொண்டார். அத்துடன் தேர்வு வினாத்தாளையும் வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு   மே 5-ம் தேதி  நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜுன் 4ந்தேதி வெளியானது. ஆனால்,   தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில்,  அதற்கு பதிலாக 10 நாட்களுக்கு முன்னதாக ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகள்  சர்ச்சையை கிளப்பியது.

தேர்வு முடிவில்,  67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மேலும் ஏராளமான  மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர், இது நீட் மதிப்பெண் திட்டத்தின் படி சாத்தியமற்றது. இதுமட்டுமின்றி ஏராளமான NEET-UG 2024 முதலிடம் பெற்றவர்கள் ஒரே தேர்வு மையத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். இதுவும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.

ஆனால், இதை தேசிய தேர்வு முகமை மறுத்து வருகிறது. அதுபோல மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் முதலில் மறுத்த நிலையில், பின்னர் தேர்வு தேர்வு வினாத்தாள் கசிந்திருப்பதை ஒப்புக்கொண்டார்.  மேலும் இதுதொடர்பாக விசாரிக்க மத்தியஅரசு குழு அமைத்தது. அந்த குழுவினர் பல இடங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நீட் முறைகேடு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்ட விவகாரமும் சூடுபிடித்து.

இதற்கிடையில் நீட்  தேர்வு முடிவு முறைகேடு எதிர்த்தும், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என  நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். மேலும் ஏராளமான வழக்குகளும் மாநில உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு உள்ளன. உச்சநீதிமன்றத்தில் மட்டும் 60க்கும் மேற்பட்ட மனுக்கள் நீட் தேர்வு தொடர்பாக தொடரப்பட்டுள்ளன.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் தேர்வில் 0.001 சதவிகிதம் தவறு நடந்திருந்தால்கூட அது தண்டிக்கப்பட வேண்டும் என்று மத்தியஅரசுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் நீட் தேர்வை எழுதிய மாணவன் ஒருவர், தனக்கு நீட் வினாத்தாள், விடை இரண்டும் முன்கூட்டியே கிடைத்து என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். 

பீகார்  மாநிலம்  சமஸ்திபூரைச் சேர்ந்த அனுராக் யாதவ் ( வயது22) என்ற இளைஞர், தனக்கு, , ஜூனியர் இன்ஜினியராக உள்ள  தனது மாமா மூலம் நீட் தேர்வுத் தாள்கள்  கிடைத்தது என்பதை  ஒப்புக்கொண்டார். கோட்டாவில் இருந்து திரும்பிய என்னை 04.05.24 அன்று இரவு என் மாமா அமித் ஆனந்த் மற்றும் நிதிஷ் குமாரிர் என்பவர்களிடம் அழைத்துச் சென்றார், அங்கு, அவர்கள்  எனக்கு நீட் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்  கொடுத்தனர். அதை  நான் இரவோடு இரவாக படித்து மனப்பாடம் செய்தேன். ” என ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி உள்ளார்.

பீகாரில் நீட் தேர்வில்முறைகேடு நடைபெற்றது தெரிய வந்த நிலையில்,  அதில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியது. அப்போது,   குற்றம் சாட்டப்பட்டவர் நீட் தேர்வுத்தாள் கசிந்ததை ஒப்புக்கொண்டார். அதாவது நீட் தேர்வுக்கு   ஒரு நாள் முன் இரவு தாள் கிடைத்ததை ஒரு மாணவர் ஒப்புக்கொண்டார்.

இந்த விவகாரம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து கூறிய காங்கிரஸ் எம்.பி. வருண் சவுத்ரி,  “இதுபோன்ற நிகழ்வுகள் வருத்தமாக இருக்கிறது… தொடர்ந்து பல பேப்பர்கள் கசிந்துள்ளது.  இதை  யாரும் தடுக்கவில்லை. அதனால்இந்த விவகாரம்  இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் ஹரியானாவில் அடுத்த ஆட்சியை அமைக்க முடிவு செய்துள்ளனர் காங்கிரஸ்” என்கிறார்