டெல்லி: நீட்  தேர்வு முடிவுகள் வெளியானது தொர்பான சர்ச்சை வழக்கில், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன்,   நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்ற விசாரணைக்குத் தடை விதித்துள்ளது.

நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு மீது பதிலளிக்க  என்டிஏ மற்றும் மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை விதித்தும், நீட் கலந்தாய்வுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது .

இளநிலை மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வான நீட் நுழைவு தேர்வு   மே 5-ம் தேதி  நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இதை 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் ஜுன் 4ந்தேதி வெளியானது. ஆனால்,   தேர்வு முடிவுகள் ஜூன் 14ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த நிலையில்,  அதற்கு பதிலாக 10 நாட்களுக்கு முன்னதாக ஜூன் 4ம் தேதி வெளியிடப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. அதைத்தொடர்ந்து வெளியான தேர்வு முடிவுகளிலும் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டது. இதனால் தேர்வு முடிவுகள்  சர்ச்சையை கிளப்பியது. தேர்வு முடிவில்,  67 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்று சிறந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.  மேலும் ஏராளமான  மாணவர்கள் 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர், இது நீட் மதிப்பெண் திட்டத்தின் படி சாத்தியமற்றது. இதுமட்டுமின்றி முதலிடம் பெற்ற ஏராளமான  மாணவர்கள் ஒரே தேர்வு மையத்தில் படித்தவர்கள் என்பதால், நீட் தேர்வு முடிவுகள் மீதான சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இதையடுத்து, கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தேர்வு முடிவை ரத்து செய்த என்டிஏ, அவர்களுகு மறு தேர்வு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  பல மாணவர்கள் தரப்பில் மாநில உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், மாணவி ஆயுஷி படேல்  என்பவர், தனது விடைத்தாள் கிழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மதிப்பெண் குறைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டி வீடியோ போலியானது என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நீட் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. அப்போது,  பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருக்கும் நீட் முறைகேடு தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி தேசிய தேர்வு முகமை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை  விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரர்கள் இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும்,   உயர் நீதிமன்றங்களில் நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஆனால் நீட் கலந்தாய்வுக்கு மீண்டும் தடை விதிக்க மறுத்து விட்டது.  அதுபோல, மாணவர்கள் தரப்பில் தொடரப்பட்ட மனுக்கள் மீது தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன்,  நீட் தேர்வு தொடர்பாக தேசிய தேர்வு முகமை மற்றும் இதர மனுக்களும் ஜூலை 8ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

நீட் விடைத்தாள் கிழிந்ததாக வீடியோ வெளியிட்ட மாணவி போலி ஆவணங்களை சமர்ப்பித்தது அம்பலம்! நீதிமன்றம் எச்சரிக்கை