உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு முதல் கலந்துகொள்ளும் வகையில் பாடத்திட்டங்களை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
JEE போன்ற தேர்வுகள் ஒரே ஆண்டில் இருமுறை நடத்தப்படுவது போல் மற்ற போட்டித் தேர்வுகளையும் ஆண்டுக்கு இருமுறை (ஏப்ரல் & நவம்பர்) நடத்தவும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை அதிகரிக்க கூடுதல் வாய்ப்பு வழங்கவும் தேவையான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட உள்ளது.

தற்போது 12ஆம் வகுப்பில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதால் பல மாணவர்கள் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் சென்டர்களே கதியென்று விழுந்து கிடக்கின்றனர்.
இதனால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்துள்ள மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.
11ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலம் தினசரி பயிற்சி நேரத்தை இரண்டு முதல் மூன்று மணிநேரமாகக் குறைக்கவும் வழக்கமான பாடத்துடன் போட்டித் தேர்வு பாடங்களையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது குறித்து மதிப்பீடு செய்கிறது.
இதுகுறித்து நவம்பர் 15 அன்று நடைபெற்ற 11 பேர் கொண்ட குழு கூட்டத்தில் மாணவர்கள் பயிற்சி மையங்களை சார்ந்திருப்பதைக் குறைப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
NEP-2020 இன் படி, ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை நுழைவுத் தேர்வுகளை நடத்துவது குறித்தும் குழு விவாதித்தது.
பள்ளி தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் இரண்டையும் ஒரு சேர எதிர்கொள்ளும் வகையிலும், மாணவர்களுக்கு அழுத்தம் இல்லாத வகையிலும் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வகுப்பறை கல்வி வலுப்படும், உள் மதிப்பீடுகளை மேம்படுத்தலாம் மற்றும் பயிற்சியின் மீதான அதிகப்படியான சார்பைக் குறைக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.