டில்லி

வெளிநாட்டுக்கு சென்று மருத்துவம் படிக்க உள்ள இந்திய மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டம் இயற்றப் பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

நம் நாட்டில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என மத்திய அரசு சட்டம் இயற்றியது.   அதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.   அந்த வழக்கில் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

இதனால் பல மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவக் கல்வி படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

தற்போது இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சக அதிகாரிகள்  கருத்து தெரிவித்துள்ளனர்.   அவர்கள், “ஒவ்வொரு ஆண்டும் ஆறாயிரத்தில் இருந்து ஏழாயிரம் மாணவர்கள் வெளிநாடு சென்று மருத்துவம் படிக்கின்றனர்.   குறிப்பாக  சீனா மற்றும் ரஷ்யா நாடுகளுக்கு  செல்கின்றனர். அவ்வாறு படிக்க,   பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் இந்திய மருத்துவ ஆணையத்திடம் தகுதி சான்றிதழ் பெற்று வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கலாம்.

அதன் பின் மருத்துவப் படிப்பு முடிந்து திரும்பியவுடன், இந்திய மருத்துவ ஆணையம் நடத்தும் அனுமதி உரிமத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பணி புரிய முடியும்.    இந்த அனுமதி உரிமத் தேர்வில் தொடர்ச்சியாக மிக குறைவான எண்ணிக்கையிலேயே தேர்ச்சி பெறுகின்றனர்.   அதாவது இந்த தேர்வு எழுதுபவர்களில் 10% – 15% மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர்.

எனவே இங்கிருந்து படிக்க செல்பவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த இந்த ஆண்டு முதல் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என சட்டத் திருத்தம் அமைக்க அரசு உத்தேசித்துள்ளது.   இதனால் 50% மதிப்பெண்கள் பெற்றவர்களில் தகுதி வாய்ந்த சிறப்பான மாணவர்கள் மட்டுமே வெளிநாட்டில் மருத்துவம் படிக்கச் செல்லும் நிலை உருவாகும்”  எனக் கூறி உள்ளனர்.