டெல்லி: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்கள் 8 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால், நீட் ஆள்மாறாட்ட மோசடி முறியடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் இளங்கலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 17ந்தேதி) பிற்பகல் நடைபெற்றது. இந்த தேர்வானது, தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வை, 18 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். தேர்வு எழுத வந்த மாணாக்கர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இது சில இடங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்வதை தடுக்க சிபிஐயும் களத்தில் இறங்கியது. இந்த நிலையில், டெல்லி மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள பல மையங்களில் ஆள்மாறாட்டம் செய்து சிலர் தேர்வு எழுத இருப்பதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள், நீட் தேர்வுக்கு முந்தையநாள் டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக அழைத்து வரப்பட்டவர்கள் தங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட சுஷில் ரஞ்சன் உள்ளிட்ட 8 பேரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர். மீதமுள்ள சிலரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், சுஷில் ரஞ்சன், அவரது கூட்டாளிகள் பிரிஞ் மோகன் சிங், பப்பு, உமா சங்கர் குப்தா உள்ளிட்ட 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதுவதற்காக பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், டெல்லி மற்றும் அரியானாவில் போலியான ஆவணங்கள் மூலம் தேர்வு மையத்தை பெற்று தந்து, தேர்வர்களுக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து, மார்பிங் செய்யப்பட்ட ஹால் டிக்கெட் மற்றும் அடையாள அட்டைகளின் உதவியுடன் தேர்வு எழுதியுள்ளதாகவும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.