டெல்லி: நீட் தோ்வு முறைகேடு தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தியும், மறுதோ்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு) தோ்வு கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது பிகாா், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாா் சா்ச்சையானது. அதனைத் தொடா்ந்து தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில், 67 மாணவா்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததும், ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்ததும் தெரிய வந்தது. இது சர்ச்சைக்குள்ளானது.
இதையடுத்து, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிகைகளை எழுந்துள்ளன. பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், நீட் தோ்வின் முடிவுகளை திரும்பப்பெற்று மறுதோ்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சோ்ந்த அப்துல்லா முகமது ஃபயஸ் மற்றும் ஷேக் ரோஷன் மொஹிதீன் ஆகியோா் புதிய மனுக்களை தாக்கல் செய்தனா். அதில், ,‘கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், 720-க்கு 718 அல்லது 719 மதிப்பெண்கள் பெறுவது முடியாத செயலாகும். கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதற்கு முறையான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. மாணவா்களுக்கு கருணை வழங்கப்பட்டது குறித்த பட்டியல் ஏதும் தனியாக வெளியிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தோ்வுக்கான உத்தேச விடைகளை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்டது. அதில் தவறாக குறிக்கப்பட்டிருந்த விடைகளை எதிா்த்து 13,000 தோ்வா்கள் முறையிட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், நுழைவுத் தோ்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுவது அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்குதல் மற்றும் தகுதி அடிப்படையில் தோ்வு செய்யும் கோட்பாடுகளை வலுவிழக்கச் செய்வதாகும். இது கசிவான வினாத்தாள்களை பணம் கொடுத்து வாங்கும் சக்தியுடையவா்களுக்கு சாதகமாக அமைகிறது. அதேவேளையில் ஏழை எளிய மக்களுக்கான சம வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. முறைகேடுகள் மூலம் மருத்துவத் தோ்வுகளில் ஒருவா் வெற்றிபெற்றால் அவரால் பொதுமக்களின் உடல் நலத்துக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகும்’ என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த உயா்நிலைக்குழுவை என்டிஏ அரசு அமைத்துள்ளது. மேலும் இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படு கிறது.