நீட் தேர்வு கேள்வித்தாள் கசிந்தது தொடர்பாக பீகார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நீட் தேர்வு மோசடியில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக நடந்த விசாரணையில் இது தக்காளி சட்னியில்லை ‘இட்ஸ் டிஃபரண்ட்’ என்று அதிர்ச்சியளிக்கக்கூடிய மேலும் பல்வேறு தகவல்கள் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

மே 5ம் தேதி நீட் தேர்வு துவங்கிய 5 நிமிடத்தில் பாட்னா நகரின் கெம்னிசாக் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிவந்த வெள்ளை நிற ரெனால்ட் டஸ்டர் கார் குறித்து பீகார் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதை கண்காணிக்கத் துவங்கினர்.

அந்த கார் அருகில் இருக்கும் ஒரு ப்ளே ஸ்கூலுக்கு சென்றதை அடுத்து அதைப் பின் தொடர்ந்த போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.

அதில் அந்த ப்ளே ஸ்கூலில் அமர்ந்து சிலர் நீட் தேர்வு எழுதுவது தெரியவந்தது. அவர்களைப்பிடித்து விசாரணை.நடத்தியதில் நீட் தேர்வு மோசடிக்கு பின்னால் ஒருபெரிய சதிகார கும்பல் செயல்படுவது தெரியவந்தது.

நீட் தேர்வில் எப்படியாவது தேர்வாகி மருத்துவராகி விடவேண்டும் என்ற கனவுடன் கையில் பணத்தை வைத்துக்கொண்டு சுற்றித்திரியும் மாணவர்களை குறிவைக்கும் இந்த கும்பல்.

அதற்காக தலா ரூ. 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு நீட் தேர்வுக்கு உரிய கேள்வித் தாள்களை கசிய விட்டுள்ளது.

காவல்துறையினர் சோதனை நடத்திய அந்த இடத்தில் மட்டும் இந்த ஆண்டு 35 மாணவர்களுக்கு இதேபோல் கேள்வித் தாளை கொடுத்து தேர்வு எழுதியது தெரியவந்தது.

இந்த கேள்வித் தாள்களை ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் அப்படியே நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் என்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு காவல்துறையினர் விசாரணையில் களத்தில் இறங்கியுள்ளனர்.

அதில், இந்த மோசடி கும்பல் ஆசிரியர் தேர்வு, வங்கி தேர்வு என பல்வேறு போட்டித் தேர்வு கேள்வி தாள்களை கசியவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டது.

ஏற்கனவே ஜார்கண்டில் இருந்து செயல்பட்டு வந்த இந்த குழு தற்போது பீகாரில் நீட் தேர்வு முறைகேட்டில் இறங்கிய நிலையில் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நீட் தேர்வு நடைபெற்ற மே 5ம் தேதி சம்பவ இடத்தில் கிடைத்த தடயங்கள் மற்றும் ஆவணங்களைக் கொண்டு நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதை உறுதி செய்த காவல்துறையினர் இது தொடர்பாக நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பியுள்ளனர்.

கேள்வித் தாள் அச்சிடும் இடம், அது எங்கு சேமிக்கப்படுகிறது, எந்த வண்டியில் செல்கிறது, யார் யார் இது தொடர்பான பணியில் உள்ளனர், கொரியர் மற்றும் வாகன ஓட்டிகள் யார் என்ற மொத்த புள்ளிவிவரங்களை சேகரித்து இவர்கள் மூலம் கேள்வித் தாளை பெற்று மிகப்பெரிய கார்ப்பரேட் திட்டமிடலுடன் இயங்கி வந்த இந்த கும்பலின் தலைவன் சஞ்சீவ் சிங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சஞ்சீவ் சிங்கிடம் நடத்திய விசாரணையில் அவனுடன் சேர்ந்து மருத்துவம் படித்த அவனது மகன் ஷிவ்குமார் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த பதிலும் அளிக்காத நிலையில் இதுதொடர்பான விவரங்கள் சமூக வலைதளத்தில் கசியவிடப்பட்டுள்ளது.

2024 நீட் தேர்வில் மதிப்பெண் மோசடி குறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வரும் நிலையில் கேள்வித் தாள் கசிந்தது தொடர்பாக மிகப்பெரிய மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்திருப்பது அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்திருப்பதோடு நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துவருகிறது.

குஜராத்தில் நீட் மோசடி தொடர்பாக 3 பேர் மீது வழக்குப் பதிவு…