திருவனந்தபுரம்: நீட் தேர்வை மாற்றத் தேவையில்லை என்றும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். அதேவேளையில் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் யெச்சூரியின் கருத் துக்கு எதிராக பினராயி விஜயன் கூறியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு கொரோனா தொற்று காரணமாக, செப்டம்பர் 13-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். கொரோனா காலத்திலும் தேர்வு திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நடைபெறும் என்று நீட் தேர்வை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.
ஆனால், இந்த தேர்வுக்கு தமிழகம் உள்பட பல மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நீட் தேர்வை மீண்டும் ஒத்தி வைக்க வேண்டும் என பல்வேறு கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் சோனயி காந்தி தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திலும், நீட் தேர்வை ஒத்திவைக்க வலியுறுத்தியும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாட முடிவெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில் ”நீட் தேர்வு நடத்துவதற்கு எதிரான நிலைப்பாட்டை கேரள அரசு எடுக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசை தொடர்பு கொள்வில்லை.” என்றார்.
ஏற்கனவே நீட் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், கட்சித்தலைவரின் அறிவிப்பை மீறி பினராயி விஜயன் நீட் தேர்வு விவகாரத்தில் மத்தியஅரசுக்கு ஆதரவாக கூறியிருப்பது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.