மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியல் 13 ஆயிரத்து 500 கோடி ஊழல் செய்து தற்போது லண்டன் சிறையில் இருக்கும் நீரவ் மோடி, தொழில் அதிபர் ஒருவரை மிரட்டியதாக அவரின் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீரவ் மோடியின் நிறுவன இயக்குநரும், தொழில் அதிபருமான அனீஷ் மோகன்பாய்க்கு மிரட்டல் விடுத்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரவ் மோடி மத்திய அரசால் தலைமறைவுக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மும்பையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான குற்றப் பத்திரிக்கையை சிபிஐ அமைப்பு தாக்கல் செய்தது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, “நீரவ் மோடியின் நிறுவனத்தில் இயக்குநராக இருந்த அனீஷ் மோகன்பாய், எகிப்திலிருந்து இந்தியாவிற்கு வர முயன்றபோது, நீரவ் மோடி அவரைத் தொடர்பு கொண்டார்.
அப்போது, இந்தியாவுக்கு செல்லக்கூடாது என்றும், லண்டனுக்கு வந்து, தனக்கு ஆதரவாக போலீசிடம் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அதற்காக ரூ.20 லட்சம் தரத் தயார் என்றார் நீரவ் மோடி. ஆனால், இதற்கு அனீஷ் மறுக்கவே, அவருக்கு நீரவ் மோடி கொலை மிரட்டல் விடுத்தார்” என்றுள்ளது.