டெல்லி: ரஷ்ய அரசுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தை  ரிலையன்ஸ்  நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆண்டுதோறும் 13 பில்லியன் டாலர் (ரூ.1.1 லட்சம் கோடி) மதிப்பிலான இந்த திட்டம், பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யாவிற்கு ஒரு நிலையான வருவாயை வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 5லட்சம் பீப்பாய் கச்சா எண்ணை இறக்குமதி செய்ய திட்டமிட்டு உள்ளது.

ரஷ்யா அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ரோஸ்நேப்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுக்கு (ஆர்ஐஎல்) நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 500,000 பீப்பாய்கள் (பிபிடி) கச்சா எண்ணெயை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை எட்டியுள்ளது, இது இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. அதன்படி,  அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவில் தேவையான அளவு கச்சா எண்ணை கிடைக்காத நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. சமீப ஆண்டுகளாக, ரஷ்யாவிடம் இருந்தே கச்சா எண்ணையை இறக்குமதி செய்து வருகிறது. ரஷ்யா  உக்ரைன் போரின்போது, மேற்கத்திய நாடுகள்  ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த தடையால், ரஷ்யா தன் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்யை, பிற நாடுகளுக்குக் குறைந்த விலைக்கு விற்க முன்வந்தது

மேற்கத்திய நாடுகளின் இந்தப் பொருளாதாரத் தடையை மீறி ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபட்டது. அதே வேளையில், ரஷ்யா உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தி வந்தார். இது தொடர்பாக உக்ரைன் அதிபர் மற்றும் ரஷ்ய அதிபரையும் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவு கச்சா எண்ணையை இந்தியா வாங்கி வருகிறது.  மேலும், அதேநேரத்தில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈராக், குவைத், அமெரிக்கா ஆகிய நாடுகளும் இந்தியாவிற்கு, கச்சா எண்ணெய்யை விநியோகம் செய்கின்றன. இருந்தாலும்,  நாட்டின் மொத்த தேவையில் சுமார் 35 சதவிகிதம் அளவுக்கு கச்சா எண்ணை ரஷ்யாவில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.  இந்தியாவின் இந்த புத்திசாலித்தனமான நடவடிக்கை காரணமாக,   சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவின் பிரபல தொழிலதிபரான,  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவிடமிருந்து ரிலையன்ஸ் மற்றும் நயாரா எனர்ஜி என்ற இரண்டு தனியார் நிறுவனங்கள் பெருமளவில் கச்சா எண்ணெய்யைப் பெற்று வருகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களும், ரஷ்யாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி அதிக அளவில் லாபம் ஈட்டி வருகின்றன.

இந்தச் சூழலில்தான், ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ரோஷ்நெஃப்ட் (Rosneft ) என்ற நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஒருநாளைக்கு 5 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இது, இந்த இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத மிகப்பெரிய எரிசக்தி ஒப்பந்தமாகப் பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் முகேஷ் அம்பானியின் டாலர் 200 பில்லியன் குழுமமான ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும்  ரஷ்யா அரசின் ரோஷ்நெஃப்ட் நிறுவனத்திற்கும் இடையே போடப்பட்டு உள்ளது.

அதாவது ஆண்டு ஒன்றுக்கு, தற்போதைய விலையில்,  13 பில்லியன் டாலர் (ரூ1.1 லட்சம் கோடி) மதிப்பிலான அளவுக்கு கச்சா எண்ணை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத் தாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்தியா-ரஷ்யாவுக்கு இடையே நடைபெற்ற மிகப்பெரிய  ஆற்றல் ஒப்பந்தம் என்றும்,   இருந்தாலும், கச்சா எண்ணையின் விலை மற்றும் தொகுதிகள் ஆண்டுதோறும் மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன.

இந்த ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையேயான எரிசக்தி உறவுகளை வலுப்படுத்துகிறது மேற்கத்திய பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் மலிவான ரஷ்ய எண்ணெயால் இந்தியா பயனடைகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எரிசக்தி துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும்  நிலையில்,  உலகத் தேவையில், குறிப்பாக சீனாவின் வளர்ச்சி குறைந்து வருவதாலும், எண்ணெய் உற்பத்தியாளர் களிடையே ஒரு பங்குக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது.  உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளர் மற்றும் நுகர்வோராக திகழும் இந்தியா, கடல்வழி ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதில் முன்னணியில் உள்ள நாடாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.