புளோரிடா: கொரோனா வைரசுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் கிட்டத்தட்ட 40% பேர் 54 வயதுக்கு குறைவானவர்கள் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கூறி இருக்கிறது.
இது தொடர்பாக சிவிசி எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது சில தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது:
COVID-19க்காக அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 508 நோயாளிகளில், அவர்களில் 20% பேர் 20 முதல் 44 வயது உடையவர்களாகவும், மேலும் 18% பேர் 45 முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
வயதான நோயாளிகளில் கொரோனா வைரசுடன் தொடர்புடைய இறப்புகளில் 80% பேர் 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களாவர். கொரோனா வைரஸ் இறப்புகளில் 1% க்கும் குறைவானவர்கள் 20 வயது முதல் 54 வயதுடைய நோயாளிகள். 19 வயதிற்குட்பட்ட நோயாளிகளில் யாரும் கொரோனாவால் இறக்கவில்லை.
உலக சுகாதார நிறுவனமானது மார்ச் 11ம் தேதி COVID-19 ஐ உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்தது. உலகளவில், குறைந்தது 2,22,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. குறைந்தது 9,100 பேர் இதில் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் அனைத்து 50 மாகாணங்களிலும் குறைந்தது 9,412 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 141 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.