கவுகாத்தி: மணிப்பூரில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 பேர் சட்டவிரோத குடியேறி உள்ளதாக மாநிலஅரசு தெரிவித்து உள்ளது. அவர்களுக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை குறித்தும் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேறிகளை பல்வேறு நாடுகளில் இருந்து கண்டறிந்துள்ளதாக முதல்வர் என் பிரேன் சிங் தெரிவித்துள்ளார். புதிய காவல் நிலையங்கள், புறக்காவல் நிலையங்கள் மற்றும் எல்லை வேலிகள் மூலம் மாநிலம் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மணிப்பூர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் சுர்ஜாகுமார் ஒக்ராம் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பிரேன் சி அளித்த பதிலில், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 10,675 சட்டவிரோத குடியேற்றவாசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஜூன் 29, 2021 முதல் இலவச இயக்க ஆட்சி (FMR) மாநில அரசால் இடைநிறுத்தப்பட்டதாக கூறினார், மேலும் FMR ஐ முற்றிலுமாக ரத்து செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் வெளியுறவு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது என்று கூறியதுடன், மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் புதிதாக பென்சிங் போடுதல் உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மியான்மர், சீனா, வங்கதேசம், நார்வே மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்கள். இவர்களில் 85 பேர், 5 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்போது மணிப்பூரில் உள்ள சட்டவிரோத குடியேறிகளில் 143 பேர் தடுப்புக் காவல் மையங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் தற்காலிக குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்காக மாநில அரசு இதுவரை ரூ.85 லட்சத்துக்கு மேல் செலவிட்டுள்ளது.
இவ்வாறு பிரேன் சிங் கூறினார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து சட்டவிரோத குடியேற்றம் குறித்த கேள்வி முக்கியத்துவம் பெற்றுள்ளது.