டெல்லி
மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது
543 மக்களவை தொகுதிகளில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் மட்டும் தனித்து 99 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது ஆட்சியமைப்பதற்கு 272 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும், தெலுங்கு தேசம் கட்சியும் பாஜகவுக்கான தங்களது ஆதரவை உறுதிபடுத்தியதையடுத்து, மத்தியில் மீண்டும் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து மோடி மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமரானார்.
தற்போது மக்களவையைப் போல மாநிலங்களவையில் தேசிய ஜனநாயாக கூட்டணி 115 இடங்களை பிடித்துள்ளது. நேற்று காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. பாஜகவின் சார்பில் 9 பேர் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி (அஜித் பவார்) என மொத்தம் 11 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஆளும் கூட்டணிக்கு 6 நியமன உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.