ராஞ்சி: ஜார்க்கண்டில் பாஜக கூட்டணியில் உள்ள அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பும், பாஜகவும் 3 தொகுதிகளுக்கு தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வரும் 30ம் தேதி முதல் 5 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநிலத்தில் இருக்கும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கை 81 ஆகும்.
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் முடிகிறது. அதற்குள், தேசிய ஜனநாயக கூட்டணியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் கூட்டமைப்பு இடம்பெற்றுள்ளது. ஆனால், தொகுதிகள் ஒதுக்கீடு விவகாரத்தில் சிக்கல் எழுந்தது.
அதன் காரணமாக, முதற்கட்டமாக 11 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அந்த அமைப்பு அறிவித்தது. அவற்றில் 3 தொகுதிகளில் கூட்டணியான பாஜக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.
அதாவது 3 தொகுதிகளில் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களே நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகி உள்ளது. இது குறித்து, மாணவர் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் தேவ்சரணண் பகத் கூறி இருப்பதாவது:
எங்கள் கட்சியானது, கொள்கைகளிலும், வாக்கு வங்கியிலும் சமரசம் செய்து கொள்ளாது. பாஜக ஏற்கனவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. ஆகையால் நாங்களும் இப்போது வேட்பாளர்களை அறிவித்து விட்டோம்.
பாஜகவிடம் நாங்கள் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 17 தொகுதிகள் கேட்டோம் என்றார். அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை பார்த்தால் ஆச்சர்யம் காத்திருக்கிறது. சிலி, ராம்கர்க், கோமியா என 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது.
அவற்றில், பாஜக ஏற்கனவே போட்டியிடுவதாக அறிவித்த தொகுதிகளான சிமாரியா, சகர்தார்புர், சிந்திரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆக, கூட்டணி கட்சிகளே 3 தொகுதிகளில் எதிரெதிராக பலப்பரிட்சை நடத்துகின்றன.
ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பாஜக இதுபோன்ற நடவடிக்கையை எடுப்பதற்கு மாணவர் கூட்டமைப்பே காரணம் என்று கூறப்படுகிறது. அந்த அமைப்பு போட்டியிடும் தொகுதிகளில் 2ஐ மட்டும்(லோஹர்தர்கா, சந்தன்கியாபுரி தொகுதிகள்) தர வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தது.
ஆனால், தமது வாக்குவங்கி பலம் அதிகம் இருக்கும் அந்த 2 தொகுதிகளையும் விட்டுத்தர முடியாது என்று மாணவர் கூட்டமைப்பு விடாப்பிடியாக இருந்தது. அதன் காரணமாக எழுந்த அதிருப்தி, கூட்டணியில் விரிசல் ஏற்படுத்தி இருக்கிறது.