மும்பை:
மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் நடந்த மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து செயல்படபோவதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சரத்பவார் கூறுகையில், ‘‘தேர்தலுக்கு பின்னர் நிலவும் சூழலுக்கு ஏற்ப 10 மாநகராட்சிகள், 25 மாவட்ட பஞ்சாயத்து க்களில் தேசிய வாத காங்கிரஸஅ கூட்டணி அமைக்கவுள்ளது. கட்சியின் தலைவர் சுனில் தாக்கரே மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் அசோக் சவுகான் ஆகியோர் ஏற்கனவே இது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர்’’ என்றார்.
‘‘இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்தால் தேர்தல் நடந்த 25 மாவட்ட பஞ்சாயத்துகளில் 17 முதல் 18 மாவட்ட பஞ்சாயத்து க்களில் பதவிக்கு வர இயலும். இது தொடர்பான சந்திப்பு விரைவில் மும்பையில் நடக்கும். அங்கு கூட்டணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலில் மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சி நிலையான வெற்றியை பெறவில்லை. சிவசேனாவில் செயல்பாட்டை வைத்து பார்க்கும் போது ஆட்சிக்கு வழங்கும் ஆதரவை விலக்கி கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. அது நடந்தால் தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்று சரத்பவார் கூறினார்.
மேலும், சரத்பவார் கூறுகையில், ‘‘மும்பை மாநகராட்சியில் கூட்டாட்சி நடத்த தேவையான பலத்தை உருவாக்க சிவசேனா முயற்சி செய்து வருகிறது. அவர்களுக்கு எங்களது ஆதரவு தேவைப்பட்டால் அது குறித்து ஆலோசனை நடத்த தயாராகவுள்ளோம்’’ என்றார்.
மும்பை மாநகராட்சி மேயர் பதவிக்கு தேவையான 114 இடங்களில் சிவசேனா 84 இடங்களை பிடித்துள்ளது. மேலும் 4 சுயேட்சைகள் ஆதரவுடன் அக்கட்சியின் பலம் 88ஆக உள்ளது. 31 இடங்களை பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி சிவசேனாவுக்கு ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் நிருபன் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.
25 மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள ஆயிரத்து 509 இடங்களில் பாஜ 406, காங்கிரஸ் 309, தேசியவாத காங்கிரஸ் 360, சிவசேனா 271 இடங்களை பிடித்துள்ளன. இதர இடங்களை சுயேட்சைகள், சிறிய கட்சிகள் கைப்பற்றியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.