மும்பை: பாகிஸ்தானின் பாலகோட் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் குறித்து, 3 நாட்கள் முன்னதாகவே ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ்ஆப் செய்த நிகழ்வு குறித்து நாடாளுமன்ற கூட்டு கமிட்டி அமைத்து விசாரிக்க வேண்டுமென தேசியவாத காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.

பாலகோட் தாக்குதல் குறித்து பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் (BARC) அப்போதைய முதன்மை நிர்வாக அதிகாரி பார்தோ தாஸ்குப்தாவுடன் அவர் வாட்ஸ்ஆப் மூலமாக உரையாடினார் என்ற உண்மைகள் கசிந்துள்ளன. அதாவது, அந்த தாக்குதல் நடைபெற்ற நாளுக்கு, மூன்று நாட்கள் முன்னதாக அர்னாப் கோஸ்வாமி இந்த உரையாடலை நிகழ்த்தியுள்ளார் என்று கூறப்படுகிறது.

இது நாடெங்கும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அர்னாப் கோஸ்வாமி மீது மும்பை காவல்துறை தாக்கல் செய்துள்ள 3000 பக்க குற்றப்பத்திரிகையில், இந்த வாட்ஸ்ஆப் விவகாரமும் அடங்கியுள்ளது.

“இது மிகவும் சீரியஸான ஒரு விஷயம். தேசப் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் தொடர்பானது. இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்காக, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

இந்த தகவல், BARC தலைவருக்கு மட்டும்தான் பகிரப்பட்டதா? அல்லது நாட்டின் உளவாளிகள் மற்றும் எதிரிகளுக்கும் பகிரப்பட்டதா? என்பது விசாரிக்கப்பட வேண்டும். மேலும், எந்த நபர், அரசு தரப்பிலிருந்து இந்த விவகாரத்தை வெளியில் கசியவிட்டார் என்பது விசாரிக்கப்பட வேண்டும்” என்றுள்ளார் மராட்டிய மாநில என்சிபி அமைச்சர் நவாப் மாலிக்.