சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் போர்வையில் நக்சல்கள் செல்வதாக மத்திய இணையமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை கடந்த 17ம் தேதி திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தியாக இருந்த வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து, பின் இரவில் நடை அடைத்துவிட்டு கோவிலின் பொறுப்பை புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைத்தார்.
நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்ட நடை, பிற்பகல் 1 மணிக்கு உச்சிகால பூஜைக்கு பின்னர் அடைக்கப்பட்டு, மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 11 மணி வரை திறக்கப்பட்டிருந்தது. இந்த நேரக்கட்டுப்பாடு இனி தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இத்தகைய சூழலில் சபரிமலை கோவிலுக்குள் பெண் சமூக ஆர்வலர்கள் நுழைய முற்படுவது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் முரளிதரன், ”சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் பக்தர்கள் போர்வையில், நகர்ப்புற நக்சல்களும், குழப்பவாதிகளும் செல்ல முயற்சிக்கின்றனர். பெண்களை வழுக்கட்டாயமாக அழைத்துச் செல்வோர், நாத்திகர்கள் என்றே எனக்கு தெரிகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றோம் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். உண்மையிலேயே அவர்கள் பக்தர்கள் தானா என்பதை ஆராய வேண்டும். கேரள அரசு பெண்களை ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.