இஸ்லாமாபாத்: உச்சநீதிமன்றம் தனக்கு வழங்கிய 6 வாரகால பெயிலை, மருத்துவக் காரணிகளின் பொருட்டு நீட்டிக்க வேண்டுமெனவும், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மன்னிக்க முடியாத சேதம் ஏற்படும் எனவும் தனது மனுவில் தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் நவாஸ் ஷெரீஃப்பிற்கு வழங்கப்பட்ட 6 வாரகால பெயில், வரும் மே மாதம் 7ம் தேதியுடன் முடிவடைகிறது. மேலும், இந்த காலகட்டத்தில், அவர் வெளிநாடு செல்லக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது.
ஆனால், தனது சீராய்வு மனு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை, தனது பெயில் நீட்டிக்கப்பட வேண்டுமெனவும், மருத்துவ சிகிச்சைக்காக தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டால், மன்னிக்க முடியாத வகையிலான சேதம் நிகழும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.