லாகூர்: ரூ.320 கோடி மோசடி வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரரும், பஞ்சாப் மாகாண முன்னாள் முதல்வருமான ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாகிஸ்தான் எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவராக இருப்பவர் ஷாபாஸ் ஷெரீப். அவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் இளைய சகோதரர் ஆவார். 2008ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பஞ்சாப் மாகாண முதல்வராக பதவி வகித்தார். அப்போது ஷாபாசும், அவரது குடும்பத்தாரும் பண மோசடிகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் ரூ. 320 கோடி மோசடி வழக்கில் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் லாகூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது கட்சியை தொண்டர்கள் திரண்டு வந்து முழக்கமிட்டனர்.
ஷாபாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பிரதமர் இம்ரான் கானின் உத்தரவின் பேரில் ஷாபாஸ் கைது செய்யப்பட்டதாக பி.எம்.எல் செய்தித் தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் குற்றம் சாட்டி உள்ளார். 58 தொகுதிகள் கொண்ட ஆவணத்தில் ஷாபாஸ் ஷெரீப் பெயர் எங்கும் இல்லை என்றும் அவர் கூறினார்.