நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி! பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

Must read

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமறைவு குற்றவாளி என இம்ரான்கான் தலைமையிலான  பாகிஸ்தான் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
பிரதமராக மூன்று முறை பதவி வகித்த  நவாஸ் செரீப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி, சிறை தண்டனை பெற்றார். சிறையில் அடைக்கப்பட்ட அவரது  உடல்நிலை பாதிப்பு காரணமாக, நீதிமன்ற அனுமதி பெற்று  லண்டனில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முன்னதாக சிறையில் ஏற்பட்ட  உடல்நல பாதிப்பு காரணமாக  லாகூர் நீதிமன்றத்தில், சிகிச்சை பெற வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனு அளித்தார். இந்த மனுமீது விசாரணை நடத்திய நீதிமன்றம், அவர் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து, நவாஸ் செரீப், லண்டன் சென்று, இதயநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், லண்டன் வீதியில் நவாஸ் ஷெரீப், தன் மகனுடன் குடை பிடித்தபடி நடந்து செல்லும் புகைப்படம் ஊடகங்களில் வெளியானது. இது  பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, நவாஸ் செரீப்பை  ‘தலைமறைவு குற்றவாளி’ என  அதிகாரபூர்வமாக அறிவித்த இம்ரான்கான் அரசு,   அவரை உடனே  நாடு கடத்துமாறும், பிரிட்டன் அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து கூறிய பாகிஸ்தான் பிரதமரின் ஆலோசகர் ஷாசாத் அக்பர்,  நவாஸ் ஷெரீப்பிற்கு, மருத்துவ சிகிச்சைக் காக அளித்த, நான்கு வார, ‘பரோல்’, கடந்த ஆண்டு, டிசம்பருடன் முடிவடைந்து விட்டது. கடந்த மாதம், அவர் சார்பில், லாகூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘கொரோனா அச்சம் காரணமாக, பாக்., திரும்ப வேண்டாம்’ என, மருத்துவர்கள் பரிந்துரைத்ததாக  கூறப்பட்டது.
ஆனால் அவர் இப்போது நலமாக இருப்பது தெரியவந்துள்ளது. அதனால், நவாஸ் ஷெரீப் தலைமறைவாக உள்ள தாக, அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.  அவரை நாடு கடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுக்க, தேசிய பொறுப்புடமை அமைப்பை, அரசு கேட்டுக் கொள்ளும் என்று தெரிவித்து உள்ளார்.

More articles

Latest article