சண்டிகர்
முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய குண்டு என்பதால் பயனற்றவர் என நவஜோத் சிங் சித்து கூறி உள்ளார்.
முன்னாள் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பிறகு டில்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது பல ஊகங்களை எழுப்பியது. இவர் பாஜகவில் சேரப்போகிறார் என பலரும் தெரிவித்தனர். அதை மறுத்த அமரீந்தர் சிங் பஞ்சாப் எல்லை குறித்து அமித்ஷாவுடன் பேசியதாக விளக்கம் அளித்தார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமரீந்தர் சிங், ”நாங்கள் நாளை டில்லி சிலரை அழைத்துச் சென்று விவசாயிகள் பிரச்சினை குறித்து அமித்ஷாவுடன் விவாதிக்க உள்ளோம். எங்களுடன் சுமார் 30 பேர் வருகின்றனர். நான் புதிதாகக் கட்சி தொடங்குகிறேன். அதற்கான பணிகளில் எனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். விரைவில் கட்சியின் சின்னமும் பெயரும் அறிவிக்கப்படும்.
பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாகக் கூறுவது தவறானது. நாங்கள் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வோம் என முடிவு செய்துள்ளோம். நாங்கள் வாய்ப்பு கிடைத்ஹ்டால் 117 தொகுதிகளில் போட்டியிடத் தயாராக உள்ளோம். மாநில காங்கிரஸ் தலைவர் நவஜோத் சிங் சித்து எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட உள்ளோம். ” எனத் தெரிவித்தார்.
அமரீந்தர் சிங் பேட்டிக்குப் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து தனது டிவிட்டரில்,
“அமரீந்தர் சிங் துப்பாக்கியில் இருந்து வெளியேறி விட்ட குண்டு ஆவார். இதனால் பஞ்சாப் மாநிலத்துக்கும் எந்த பயனும் இல்லை. அமரீந்தர் தனது உடல் தோலைக் காப்பாற்றுவதற்காக மாநிலத்தின் நலனை விற்ற பஞ்சாபின் முன்னாள் முதல்வர். மத்திய அமலாக்க இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விசுவாசமான முதல்வர் இவர். பஞ்சாபின் நீதி, வளர்ச்சியைத் தடுக்கும் எதிர்மறை சக்தியாக நீங்கள் இருந்தீர்கள்”
என விமர்சித்துள்ளார்.