கோவை: கோவை கொடிசியாவில் நடைபெறும் இயற்கை வேளாண்மை மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர்  மோடி நாளை (நவ.19)  வருகை தர  உள்ள நிலையில், அங்கு கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், கோவை கொடிசியா மற்றும் முக்கிய பகுதிகளில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபபட்டு உள்ளனர். மேலும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோவை வரும் பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து பேசப்போவதாக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறி உள்ளார்.

அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நடைபெறும் தென்மாநில இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு மாநாட்டைப் பிற்பகல் 1:40 மணிக்குத் துவக்கி வைத்து, விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

தென்மாநில இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் நாளை (நவ.19) முதல் நவம்பர் 21-ஆம் தேதி வரை இயற்கை விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, நாளை பிற்பகல் 1:25 மணிக்கு கோவை விமான நிலையத்தை வந்தடைகிறார். பிற்பகல் 1:40 மணிக்கு கொடிசியா வளாகம் வந்தடையும் பிரதமர், 1:45 மணி முதல் 3:15 மணி வரை நடைபெறும் மாநாட்டைத் துவக்கி வைக்கிறார். அங்கு அவர் விவசாயிகளுடன் கலந்துரையாடி, வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகளையும் வழங்க உள்ளார். நிகழ்ச்சி முடிந்து பிற்பகல் 3:25-க்கு விமான நிலையம் வந்து, 3:30 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர் முழுவதும் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நகரின் முக்கிய பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் கொடிசியா வளாகம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் (CISF) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர், SIHS காலனி, சின்னியம்பாளையம், நேரு நகர், காளப்பட்டி, கொடிசியா வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், சித்ரா, பீளமேடு, சரவணம்பட்டி, லட்சுமி மில்ஸ், ராமநாதபுரம், பந்தய சாலை உள்ளிட்ட பல பகுதிகள் தற்காலிகமாக ‘ரெட் ஜோன்’ (Red Zone) ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ‘ரெட் ஜோன்’ அறிவிப்பைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் (நவ.17) மாலை 7 மணி முதல் நாளை (நவ.19) மாலை 7 மணி வரை ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.

விமான நிலையம் பார்க்கிங் பகுதியில் இன்று காலை 6 முதல் நாளை மாலை 6 மணி வரை வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை பிற்பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை அவிநாசி சாலையில் இருந்து விமான நிலையச் சாலைக்குச் செல்லும் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு விமான நிலையப் பகுதியிலும், கொடிசியா சாலையின் இருபுறங்களிலும் தமிழக பா.ஜ.க.வினர் சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவை வரும் பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகள் எடுத்துரைக்க உள்ளதாக பி.ஆர் பாண்டியன் தெரிவித்தார்.

 

தென்னிந்திய இயற்கை விவசாயிகள் மாநாடு தொடர்பாக,   மாநாட்டின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , “விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று இயற்கை விவசாயிகள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க 19 ஆம் தேதி பிரதமர் கோவை வருகிறார். ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப் பார்க்கும் வகையிலான மாநாடாக இது அமையவிருக்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொள்பவர்கள், இயற்கை விவசாயத்தை அறிமுகம் செய்த ஐயா நம்மாழ்வார் அவர்களோடு பணியாற்றிய விவசாயிகள் ஆகியோருடன் பிரதமர் கலந்துரையாட இருக்கிறார்.

இந்த கலந்துரையாடல் இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு நல்வாய்ப்பாக அமையும். இம்மாநாட்டில் கலந்து கொள்ள வரும் பிரதமர் இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்குகளையும், விவசாய உற்பத்தி பொருட்களையும் பார்வையிட உள்ளார்.

பிரதமரிடம் இயற்கை வேளாண் பொருட்கள் தயாரிப்பு, தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகள் எடுத்துரைக்க உள்ளனர். தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். மொத்தமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.

வேளாண் விஞ்ஞானிகள் இதில் கலந்து கொண்டு உற்பத்தியை பெருக்குதல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடக்கிய அறிக்கை தயார் செய்து வழங்க உள்ளனர். அது இயற்கை விவசாயம் சார்ந்த கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் இயற்கை விவசாயத்தில் சாதனை புரிந்துள்ள 10 விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் 200 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இதனை விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

இயற்கை விவசாயம் என்பது மண் வளத்தை பெருக்கி நஞ்சில்லாத உணவுகளை விளைவித்து நோயின்றி மனிதர்கள் வாழவும் வழிவகுக்கிறது. பிரதமர் நேரடியாக இந்நிகழ்வில் விவசாயிகளோடு கலந்துரையாட உள்ளதால் உரிய கொள்கை முடிவுகள் வகுக்கப்படும் என கருதுகிறோம். இது முழுக்க முழுக்க விவசாயிகள் நடத்தும் மாநாடு. எந்த அரசியல் சார்பும் கிடையாது.

இதில், கலந்து கொள்வதற்காக மாநில முதலமைச்சர்கள் உட்பட யாருக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்படவில்லை” என தெரிவித்தார்.