டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், விளைபொருள்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலையை தொடா்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, டெல்லி எல்லையில் வடமாநில விவசாயிகள் போராடி வருகின்றனர்.

அவர்களின் போராட்டம் 77வது நாளை எட்டி உள்ளது. தொடர் போராட்டத்தில் பங்கேற்றவர்கள், பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்கள் என 70க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், எல்லைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 18ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் நாடு முழுவதும் 4 மணி நேரம் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும் விவசாயிகள் சங்கம் கூறி உள்ளது.