2020-ல் நிறைவேற்றப்பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்களை நவம்பர் 21-ஆம் தேதி முதல் அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில், பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு பதிலாக தொழிலாளர் ஊதியச் சட்ட விதி 2019, தொழில்துறை தொடர்புகள் சட்ட விதி 2020, சமூகப் பாதுகாப்புச் சட்ட விதி 2020 மற்றும் தொழில்முறைப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணியிடச் சூழல் சட்ட விதி 2020 ஆகிய நான்கு புதிய தொழிலாளர் சட்ட விதிகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டங்கள் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதிக்கும் என்று தொழிற்சங்கங்கள் கூறிவருகின்றன.

புதிதாக அமலுக்கு வந்துள்ள தொழிலாளர் சட்ட விதிகளின்படி :

  1. அனைத்து தொழிலாளர்களுக்கும் பணி நியமனக் கடிதம் வழங்குவது கட்டாயம்.

  2. ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தர ஊழியர்களைப் போன்றே

    • விடுமுறை,

    • மருத்துவ வசதி,

    • சமூக பாதுகாப்பு
      ஆகியவை வழங்கப்பட வேண்டும்.

  3. 40 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவ பரிசோதனை.

  4. Gig workers மற்றும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கும்

    • வருங்கால வைப்பு நிதி (PF),

    • காப்பீடு,

    • பிற நலன்கள்
      நீட்டிக்கப்பட்டுள்ளன.

  5. ஆனால் PF மற்றும் ESIக்கு உள்ள முந்தைய நிபந்தனைகள் (PF – 20 ஊழியர்கள், ESI – 10 ஊழியர்கள்) மாற்றப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.

  6. கிராஜுவிட்டி பெற தேவையான பணிக்காலம்

    • முன்பு: 5 ஆண்டுகள்

    • இப்போது: 1 வருடம்.

  7. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் அதிக நேரம் வேலை வாங்கினால், ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும்.

  8. ஐ.டி. ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 7-ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.

  9. பெண்கள் இரவு வேலையில் பணிபுரிய தடையில்லை; அவர்களின் சம்மதத்துடன் பணியமர்த்தலாம்.

  10. ஊழியர்களை நீக்குதல், ஆட்குறைப்பு, நிறுவனம் மூடுதல் போன்றவற்றுக்கு அரசின் அனுமதி பெற வேண்டிய அளவு

    • முன்பு: குறைந்தது 100 ஊழியர்கள்

    • இப்போது: 300 ஊழியர்கள்.

  11. வீட்டில் இருந்து வேலை செய்யும் (Work From Home) வசதி விதிமுறைகளில் நேரடியாக சேர்க்கப்பட்டுள்ளது; இது நிறுவனமும் ஊழியரும் இணைந்து தீர்மானிக்கக்கூடியது.

  12. இந்த விதிமுறைகள் தொகுப்பு 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

  13. Fixed Term Employment முறை அறிமுகம்:
    நிறுவனம்–ஊழியர் இடையிலான நேரடி கோப்பந்தத்தின் மூலம் காலவரையறை உடைய பணியமர்த்தல்.
    நிரந்தர ஊழியர்களுக்கு உள்ள அடிப்படை நலன்கள் இதிலும்கிடைக்கும்.

  14. வேலை நிறுத்தம் (Strike) பற்றிய வரையறை மாற்றம்:
    நிறுவனத்தில் 50%க்கு மேற்பட்ட ஊழியர்கள் ஒரே நேரத்தில் திடீரென விடுப்பு எடுத்தால், அது வேலை நிறுத்தமாக கருதப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து நவம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த நான்கு சட்ட விதிகள் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த புதிய விதிமுறைகள் காரணமாக நீண்டகால பணி பாதுகாப்பு பறிக்கப்படும் என்று தொழிற்சங்கங்கள் விமர்சித்துள்ளன.

  • முன்னர் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிறுவனங்களில் பணிநீக்கம்/ஆட்குறைப்பு/நிறுவனம் மூடுவதற்கு அரசின் அனுமதி அவசியம் என்று இருந்தது தற்போது 300ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இதனால் சிறு, நடுத்தர நிறுவனங்களில் வேலைசார் விதிகள் அமல்படுத்தப்படாமல் போகும்; ஊழியர் உரிமைகள் பலவீனப்படும்.
  • 50% ஊழியர்கள் ஒரே நேரத்தில் லீவு எடுத்தால் அது “வேலை நிறுத்தம்” என்ற புதிய அறிவிப்பால் வேலைநிறுத்த உரிமை குறைக்கப்படும்; தொழிலாளர்களின் போராட்ட திறன் கட்டுப்படுத்தப்படும்.
  • நிரந்தர பணி குறைந்து ஒப்பந்த வேலை அதிகரிக்கும்; நீண்டகால பணி பாதுகாப்பு குறையும்.
  • PF மற்றும் ESIக்கு உள்ள ஊழியர் வரம்பு தளர்த்தப்படாததால் சிறு நிறுவன ஊழியர்கள் இன்னும் PF/ESI பாதுகாப்பை பெற முடியாத நிலை நீடிக்கும்.
  • புதிய சட்டங்கள் முதலாளிகளுக்கு அதிக அதிகாரம் வழங்கும், தொழிலாளர்களின் கோரிக்கை மட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளன.

இதையடுத்து INTUC, AITUC, HMS, CITU, AIUTUC உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இந்த சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.