டெல்லி:
இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடையும் நிலையில், மேலும் பரவலை தடுக்கும் வகையில் பொது முடக்கம் மே 3 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணி முதல் உரையாற்றி வருகிறார். தொடக்கத்தில் நாட்டு மக்களின் தியாகத்திற்காக நான் மரியாதையுடன் வணங்குகிறேன் எtன்று மோடி குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசியவர், கொரோனா பரவலை மேலும் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 3ந்தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்து உள்ளார்.
ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்க தனி மனித இடைவெளி முக்கிய பங்கு வகிக்கிறது
பிற நாடுகளை விட இந்தியாவில் வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது.
இந்தியா எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகளை பிற நாடுகள் பாராட்டி வருகின்றன.
நாம் தேர்ந்தெடுத்த பாதை மிகச் சரியானது எனவும் சரியான நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் பிரதமர் தெரிவித்தார்.
Aarogya Setu செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள் என்று வலியுறுத்திய பிரதமர், ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சூசமாக தெரிவித்தார்.
கொரோனா பரவும் அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது . ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று கூறினார்.
ஏற்கனவே தமிழகம் உள்பட மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்காளம், கர்நாடகா, தெலுங்கானா போன்ற மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.