டெல்லி: நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருது பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசானது ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது. அதன்படி கடந்த ஆண்டுக்கான நீர் மேலாண்மைக்கான விருது பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தையும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநிலங்கள் முறையே 2 மற்றும் 3வது இடத்தையும் பிடித்துள்ளன. நீர் மேலாண்மை சிறப்பு பிரிவில் மிசோரம் மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.
அதேபோல் சுற்றுச்சூழலால் பாதிக்கப்பட்ட ஆறுகளை சிறப்பாக மறு சீரமைப்பு செய்ததற்காக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுக்கு மதுரை மாநகராட்சி தேர்வாகி உள்ளது.