டில்லி:

நாடு முழுவதும் இன்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினம் என்பது  அனுசரிக்கபடுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட 1950ம் ஆண்டை குறிக்கும் வகையில் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில்,  “வலிமையான ஜனநாயகத்தை உருவாக்கும் பணியில் 18 வயதானவர்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். வாக்குகளின் அதிகாரம் மகத்தானது என்பதை உணரவைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நாடு முழுவதும் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி,  ஓட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமையாக கருத வேண்டும் மற்றும் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் இந்த தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சாதி, மதம், இனம் என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள். அவர்கள் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்து கொள்தல் அவசியம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.