டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று 3வது நாளாக ஆஜரான சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்திய நிலையில், விசாரணை நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 100 கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக நடைபெற்ற சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ராகுல்காந்தி உள்பட பலரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை சோனியாகாந்தியிடம் கடந்த 3 நாட்களாக விசாரணை நடத்தியது.
முதல்நாள் 2 மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, நேற்று 6மணி நேரம் விசாரணை நடத்தியது. இன்று சுமார் 3மணி நேரம் மட்டுமே விசாரணை நடத்திய நிலையில், வழக்கு தொடர்பாக சோனியாவிடம் , மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர், பொறுமையாக பதில் அளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சோனியாகாந்தியிடம், அமலாக்கத்துறையின் கூடுதல் இயக்குனர் மோனிகா ஷர்மா குழு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தது.
இந்த விசாரணையின்போது, பிரியங்கா காந்தி தனது தாய்க்கு ஏதேனும் மருந்துகள் தேவைப்பட்டால், கொடுக்கும் வகையில், அலுவலகத்தில் உள்ள அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டார். சோனியா காந்தியிடம் நடத்தப்பட்ட 3 நாள் விசாரணையின் போது ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகளே கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.