டெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் அமலாக்கத்துறையினரின் 3மணி நேர விசாரணைக்கு பிறகு, மத்திய உணவு இடைவேளைக்காக ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தார். பிற்பகல் விசாரண தொடரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. சோனியாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் அமலாக்கதுறை அலுவலகம் முன்பு சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது. அதன்படி, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை சத்தியாகிரக பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், காங்கிரஸ் பேரணிக்கு டெல்லி காவல்துறை தடை விதித்தது.  பேரணியால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தினால் அனுமதி மறுக்கப்படுவதாக போராட்ட ஒருங்கிணைப்பு குழுவுக்கு டெல்லி காவல்துறை இணை ஆணையர் அம்ருத்தா குகுலோத் கடிதம் அனுப்பியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாக ரன்தீப் சுர்ஜிவாலா, அரசியல் உள்நோக்கத்துடன் இந்த விசாரணை நடைபெறுவதாகவும், ஆளும் கட்சி மத்திய அமைப்புகளை சொந்த ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டினார்.  எனினும், திட்டமிட்டபடி இன்று காலை சத்தியாகிரக பேரணி நடத்தப்படும் என்றும் கட்சியினர் அனைவரும் தலைமை அலுவலகத்துக்கு வரும் படியும் காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுப்பட்டது.

ஆனால், தடையை மீறி,  அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியினருடன் பேரணியாக சென்று ஆஜர் ஆனார். இதைத்தொடர்ந்து ராகுலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சுமார்  3 மணி நேர விசாரணைக்கு பிறகு மதிய உணவு இடைவேளைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புறப்பட்டு சென்றார்.

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு சுமார் 3.30 மணி அளவில் மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகம் திரும்பினார். மதிய உணவிற்குப் பிந்தைய அமர்வில் ஹெரால்ட் கையகப்படுத்தல் மற்றும் அதன் பரிவர்த்தனைகளின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என தெரிகிறது.
முன்னதாக மதிய இடைவேளையின்போது, தனது சகோதரி பிரியங்காவுடன், டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.