டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி.யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
2022 ஆம் ஆண்டு நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை 4 அமர்வுகளில் கிட்டத்தட்ட 40 மணிநேரம் அமலாக்கத்துறை விசாரித்தது. இந்தநிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இகுறித்து செய்தியாளர்கள் ழுப்பிய கேள்விக்கு பதில் கூறிய ராகுல், ஈடி அதிகாரிகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறியவர், ஏற்கனவே ,இடி அதிகாரியிடம் இந்தியாவில் ஜனநாயகத்தை யார் கொலை செய்கிறார்கள் என்று பார்க்க விரும்புவதாக தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியால் நடத்தப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்புடைய பண மோசடி வழக்கில் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஏதுவாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது எனவே வழக்கில் தொடர்புடைய அனைவரும் விரைவில் நேரில் அழைக்கப்படுவார்கள் என அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக கடந்த வாரம் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், மக்களவையில் மோடியின் சக்கர வியூகத்தில் நாடு மாட்டிக்கொண்டுள்ளதாகத் தான் பேசியது சிலருக்குப் பிடிக்கவில்லை. எனவே அமலாக்கத்துறை விரைவில் தனது வீட்டுக்கு ரெய்டு வர உள்ளதாகவும், அவர்களுக்காக டீ பிஸ்கட்டுடன் காத்திருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குக் காங்கிரஸ் கட்சி நிதி வழங்கியது. அசோசியேட் ஜர்னல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்ட இப்பத்திரிகை 2010-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக கடன் வழங்கப்பட்டு இருந்ததால் அக்கடனுக்கு மாற்றாக அந்நிறுவன பங்குகள், காங்கிரஸ் கட்சிக்க மாற்றாமல், அப்போது கட்சியின் தலைவராக இருந்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
இது சட்டவிரோத செயல் என்று்ம் இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார். ரூ.50 லட்சம் மூலதனத்தில் தொடங்கப்பட்ட யங் இந்தியா நிறுவனம் ரூ.90 கோடி கடனுக்காக அசோசி யேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள், பங்குகளை பெற்றுக் கொண்டதாக மனுவில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக வருமான வரிதுறை வழக்குப்பதிவு செய்தது. இதைத்தொடர்ந்து பங்குகள் பரிமாற்றத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது.
விசாரணையைத் தொடர்ந்து, டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள அந்த பத்திரிகைக்கு சொந்தமான ரூ.752 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை கையகப்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை கடந்த காலங்களில் சம்மன் அனுப்பி பலமணிநேர விசாரணையை நடத்தியது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல்காந்தியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.]