டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அமலாக்கத்துறை புதிய சம்மனை அனுப்பி உள்ளது. அதில் வரும் 23ம் தேதி ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளது.
நேஷனல் ஹெரால்டு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி தொடர்ந்த வழக்கில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. முதலில் ஜூன் 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், புதிய தேதி வழங்குமாறு அவர் கோரியிருந்தார். இதையடுத்து ஜூன் 13 ஆம் தேதி டெல்லியில் உள்ள தலைமையகத்தில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு மத்திய அமலாக்கத்துறை இயக்குனரகம் கடந்த 8ந்தேதி சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் தனக்கு மேலும் 3 வாரம் அவகாசம் வேண்டும் என சோனியா தரப்பில் வேண்டுகோள் விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது. மேலும் 13ந்தேதி விசாரணைக்கு ராகுல்காந்தி ஆஜராவார் என்றும், அன்றைய தினம் டெல்லி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மத்தியஅரசின் ஏஜென்சிகளை தவறாகப் பயன்படுத்துவாக கூறி ED அலுவலகத்திற்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், அமலாக்கத்துறை சோனியா காந்தியின் வேண்டுகோளை ஏற்று, புதிய சம்மனை அனுப்பி உள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சோனியாகாந்திக்கு அமலாக்கத்துறை இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.