டில்லி:
கிருஷ்ணா நதியில் நடைபெற்று வந்த மணல்கொள்ளைக்கு எதிரான வழக்கில், ஆந்திர மாநல அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு ரூ.100 கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
ஆந்திர மாநிலத்தில் வற்றாத ஜீவநதியாக ஓடும் கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது என்றும், விஜயவாடாவில் உள்ள சந்திரபாபு நாயுடு வீடு அருகே ஓடும் கிருஷ்ணா நதியில் மணல் கொள்ளை நடந்து வருவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இதுகுறித்து ‘தண்ணீர் மனிதன்’ என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங், அனுமோலு காந்தி ஆகியோர் டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயதில் புகார் அளித்தனர். இதையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டது. அதையடுத்து, கிருஷ்ணா நதியில் மணல் கொள்ளை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆந்திர அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்ததுடன், கிருஷ்ணா நதியில் மணல் அள்ளுவதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
அபராத தொகையை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கணக்கில் சேர்த்து மாசு கட்டுப்பாட்டுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என தலைமை செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது. அதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 23-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தது.