சென்னை: தேசிய கொடியை அவமதித்தது தொடர்பான வழக்கில், எஸ்.வி.சேகரின்  முன் ஜாமீன் கோரிய வழக்கில், காவல்துறை சார்பில், எஸ்.வி.சேகரை கைது செய்யும் திட்டம்இல்லை, என அவருக்கு ஆதரவாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும், பாஜக நிர்வாகியுமான  எஸ்.வி.சேகர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, அவ்வப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். இவர் சமீபத்தில்  தேசியகொடியின் வண்ணம் குறித்து விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர்மீது தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில்  புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து, புகார் காரணமாக  தான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதி, எஸ்.வி.சேகர், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுமீதான விசாரணையின்போது, காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஆகஸ்டு 28ந்தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இதற்கிடையில், புகார் தொடர்பான விசாரணைக்காக  கடந்த 24ஆம் தேதி எஸ்.வி.சேகர் காவல் நிலையத்தில், ஆஜரானார்.தொடர்ந்து, இன்று 2வது நாளாகவும் எவிசாரணைக்கு ஆஜரானார்.

இந்த நிலையில், எஸ்.வி.சேகரின் பெயில் பெட்டிசன் மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதி மன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது காவல்துறை தரப்பில், எஸ்.வி.சேகரை கைது செய்ய காவல்துறை திட்டமிடவில்லை என்று தெரிவித்திருப்பதுடன், அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தால் போதும் என, அவருக்கு ஆதரவாக தெரிவித்து உள்ளது.

இதையடுத்து, நீதிமன்றம், எஸ்.வி.சேகர் மன்னிப்புகோரி பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய செப்டமபர் 2ந்தேதி வரை அவகாசம் வழங்கி, வழக்கை ஒத்தி வைத்துள்ளது.

எஸ்.வி.சேகர் விவகாரத்தில் காவல்துறையினரின் மெத்தனப்போக்கு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின்புலமாக இருப்பது, முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனா, மத்திய பாஜக அரசாயார் என சமூக வலைதளங்களில்  கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.