டில்லி

புதிய கல்விக் கொள்கை அமைப்புக் குழு தேசிய கல்வி ஆணையம் அமைக்க வேண்டும் என பரிந்துரை அளித்துள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைத்துள்ள புதிய கல்விக் கொள்கை அமைப்புக் குழு தனது பரிந்துரைகளை ஒரு திட்ட வரைவாக அமைச்சகத்திடம் அளித்துள்ளது. அந்த திட்ட வரைவில் இந்திய கல்வி முறைகளில் மட்டுமின்றி மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திலும் பல மாறுதல்கள் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவில், “ நாட்டில் உள்ள கல்வியமைப்பின் தொலைநோக்குப் பார்வையை தொடர்ச்சியாக, அதே சமயம் நிலையாக மேம்படுத்துதல், அமல்படுத்துதல், மதிப்பிடுதல், திருத்துதல் போன்றவற்றை செய்யக் கூடிய வகையிலான புதிய உச்ச அமைப்பு ஒன்றை அமைக்க வேண்டும். அதை ராஷ்ட்ரீய சிக்ஷா ஆயோக் அல்லது தேசிய கல்வி ஆணையம் என்று குறிப்பிடலாம்.

கல்வி மற்றும் கற்றலில் கவனத்தை மீட்டெடுக்கும் வகையில் மனிதவள மேம்பாட்டுத் துறையின் பெயரை மீண்டும், கல்வி அமைச்சகம் என மாற்றலாம்.

இந்திய மக்கள் அறிவுப்பூர்வ விவகாரங்களுக்கும், வரலாற்றுக்கும் அளித்துள்ள பங்களிப்பின் காரணமாகவே, தற்போதைய பள்ளிக் கல்விகளிலும், புத்தகங்களிலும் அவர்கள் குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் கணிதம், வானியல், தத்துவம், உளவியல், யோகா, கட்டுமான தொழில்நுட்பம், மருத்துவம், நிர்வாகம், அரசியல், சமூகம் உள்ளிட்ட துறைகளுடன், இந்திய அறிவுசார் அமைப்புகளை பாதுகாப்பதும் இதில் அடங்கும்.

தனியார் பள்ளிகள் தங்களின் கட்டண அமைப்பை சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால், அவை தன்னிச்சையாக கட்டணத்தை அதிகரிக்கக் கூடாது. பள்ளி மேம்பாட்டு நிதி, உள்கட்டமைப்பு நிதி என்ற பெயரில் கல்விக் கட்டணத்தில் எந்தவொரு கணிசமான உயர்வும் இருக்கக் கூடாது.

கட்டண அதிகரிப்பு சதவீதத்தை, மாநில பள்ளிகள் ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்எஸ்ஆர்ஏ) என்ற புதிய ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நிர்ணயிக்கும். பொருளாதார நிபுணர் சாணக்யா, கணித மேதை பானினி, வானியல் ஆராய்ச்சியாளர் ஆரியபட்டா போன்றோர் பயின்ற பழங்கால பல்கலைக்கழகங்களான தட்சஷீலம் மற்றும் நாளந்தாவின் பிரபல பட்டதாரிகள், ஆராய்ச்சியாளர்கள் குறித்த கல்வி சேர்க்கப்படலாம்.” என கூறப்பட்டுள்ள்து.

மேலும் மாணவர்கள் ஒரு பாடத்தில் தேர்வு எழுதிய பிறகு, மீண்டும் அதே பாடத்தை படித்து அதைவிட சிறப்பாக எழுத விரும்பினால் அதற்கு அனுமதிக்கலாம் என்பது போன்ற பரிந்துரைகள் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன