ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக முன்னாள் தலைமை நீதிபதி நசிருல் முல்க் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் தற்போதைய ஆட்சியின் பதவிக்காலம் இந்த மாதம் 31ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.    அந்நாட்டு தேர்தல் ஆணையம்  நாடாளுமன்ற தேர்தல் ஜுலை 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளது.   அதனால் இரு மாத காலங்களுக்கு ஒரு இடைக்கால பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதற்காக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி சார்பில் சுமார் 6 க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.   ஆனால் ஒரு சுமுக முடிவு எட்டப்படாமல் இருந்தது.  தற்போது ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நசிருல் முல்க் ஒரு மனதாக இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   இந்த தகவலை தற்போதைய பிரதமர் ஷாகின் காகன் அப்பாசி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் குருஷீத் ஷா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இடைக்கால பிரதமர் நசுருல் முல்க்  67 வயதானவர்.  இவர் தலைமையில் பொதுத் தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடக்கும் என இரு தரப்பிலும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய முஸ்லிம் லீக் ஆட்சி முடிவடையும் 31 ஆம் தேதி அன்றே நசிருல் முல்க் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.