பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய 1.8 கிலோ எடை கொண்ட சிறிய ஹெலிகாப்டர் வடிவிலான பறந்து சென்று படம் பிடிக்கும் இயந்திரமான ‘இன்ஜெனுட்டி’ இதுவரை 12 முறை அந்த கிரகத்தின் மேற்பரப்பில் பறந்து சென்று படமெடுத்துள்ளது.

பூமியில் இருந்து ரோவர் பெர்ஸெவேரன்ஸ் என்ற விண்கலத்தில் பயணம் செய்த இந்த ‘இன்ஜெனுட்டி’ ஐந்து முறை மட்டுமே பறக்கக் கூடியது அதன்பின் இது செயலற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆறு மாதத்திற்குப் பின் இன்னமும் நல்ல நிலையில் இயங்கிக்கொண்டிருப்பது நாசா விஞ்ஞானிகளை வியக்க வைத்திருக்கிறது.

செவ்வாய் கிரகத்தின் சீதோஷண நிலைக்கும் அங்குள்ள காற்றழுத்த நிலைக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட இந்த குட்டி ஹெலிகாப்டர், ஏப்ரல் மாதம் 19 ம் தேதி தனது முதல் பயணத்தைத் துவங்கியது.

ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சில சிக்கலை சமாளித்து வெற்றிகரமாக இயங்கி வரும் ‘இன்ஜெனுட்டி’ அந்த கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து அதிகபட்சமாக 12 மீட்டர் உயரம் வரை பறந்து படமெடுத்துள்ளது.

இதன் கடைசி பயணத்தின் போது 2 நிமிடம் 49 வினாடிகள் தொடர்ந்து பறந்ததுடன் இதுவரை மொத்தம் 2.57 கிலோ மீட்டர் தூரம் பறந்து விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

இதனால், ‘இன்ஜெனுட்டி’ ஹெலிகாப்டரை அதன் ஆயுள் உள்ளவரை செயல்படுத்திப் பார்க்க நாசா விஞ்ஞானிகள் தீர்மானித்திருப்பதாகத் கூறப்படுகிறது.