வாஷிங்டன்:அமெரிக்க விண்வெளி மையமான நாசாவின் செயல் தலைவராக இந்திய வம்சாவளியான பவ்யா லால் நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதற்கான நியமன உத்தரவை அதிபர் ஜோ பிடன் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: பவ்யா லால், பொறியியல் மற்றும் விண்வெளி தொழில் நுட்பத்தில் அளப்பரிய அனுபவங்களைக் கொண்டு வருகிறார்.
அவர் 2005ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை பாதுகாப்பு ஆராய்ச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கை மையத்தின் ஆராய்ச்சி ஊழியராக பணியாற்றி வந்தவர்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில், விண்வெளி தொழில்நுட்பம், கொள்கை உள்ளிட்ட துறைகளில் தலைமை பொறுப்பை வகித்து வந்தார்.
அணுசக்தி பொறியியல் பிரிவில் இளநிலை மற்றும் முதுகலை பட்டத்தையும், தொழில்நுட்பம் மற்றும் கொள்கை பிரிவில் முதுகலை பட்டத்தையும், பொதுக் கொள்கை மற்றும் பொது நிர்வாகப் பிரிவில் பிஎச்.டி.யையும் பவ்யா லால் முடித்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.