வாஷிங்டன்

ஸ்திரேலியாவில் உண்டாகி உள்ள காட்டுத் தீயால் உலகம் முழுவதும் புகையால் சூழப்படலாம் என நாசா எச்சரித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் சுமார் 28 பேர் மரணம் அடைந்துள்ளனர்.   அத்துடன் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகி உள்ளன.   இந்தக் காட்டுத் தீ கண்டத்தில் முழுவதுமாக பரவி வருவதால் அதை அணைக்க அந்நாட்டு அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.   இதுவரை ஆஸ்திரேலியாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய நகரங்களான சிட்னி,மெல்போர்ன், கான்பெரா, அடிலெய்ட் உள்ளிட்ட நகரங்களில் கடும் புகை மூட்டம் உள்ளது.  அத்துடன்  இந்த புகை ஆஸ்திரேலியாவைத் தாண்டியும் பரவத் தொடங்கி உள்ளது.  இது குறித்து  அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால் உண்டான புகை உலகெங்கும் பரவி வருகிறது.   ஏற்கனவே ஆஸ்திரேலிய நகரங்கள் இந்த புகையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.   புத்தாண்டு சமயத்தில் அந்தப் புகை தென் அமெரிக்கா வரை வந்துள்ளது.  அத்துடன் சிறிது சிறிதாகப் பரவி வரும் அந்த புகையானது உலகின் பாதியை சூழ்ந்துள்ளது.

 

இந்த புகை மேலும் மேலும் பரவி வருவதால் அனேகமாக உலகம் முழுவதையும் இந்த  புகை சூழும் அபாயம் உள்ளது.

இந்த புகை பரவும் அதிக பட்ச உயரத்தைக் கொண்டே இந்த புகையினால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்துத் தெளிவாகக் கூற முடியும்.   தற்போது இந்த புகையால் தென் அமெரிக்க வானத்தின் நிறம் கருமை அடைந்துள்ளது.  நியுஜிலாந்து பகுதியில் புகை அடர்த்தி அதிகமாக உள்ளதால் அந்த பகுதி முழுவதும் பனிப்படலம் பரவியது போல உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.